பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுக்கு சொந்தமான 11 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி நிதியை முறைகேடு செய்ததாகவும், சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த மூடா கட்சி தலைவர் ஷெட் சாடிக் ஷெட் அப்துல் ரஹ்மான், குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
30 வயதுடைய முவார் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படித் தண்டனையும் ஒரு கோடி வெள்ளி அபராதமும் விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
எனினும் இத்தண்டனையை எதிர்த்து சையிட் சாடிக், புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையின் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி அசார் அப்துல் ஹமிட் அனுமதி அளித்தார்.
இவ்வழக்கில் சையிட் சாடிக்கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் பிராாசிகியூஷன் தரப்பு வெற்றி பெற்று இருப்பதையும் நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக பொறுப்பு வகித்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் சென்ட்ரல் 2, கேஎல் சென்ட்ரல் லில் உள்ள சிஐஎம்பி வங்கியின் கிளை அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றவில் சட்டம் 406 பிரிவின் கீழ் அந்த இளம் எம்.பி. குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.








