Dec 4, 2025
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.24-

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு முறை வழக்கப்படக்கூடிய 100 ரிங்கிட் உதவித் தொகையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சில தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அந்த 100 ரிங்கிட் தொகை சில தரப்பினருக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது கம்பத்து மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாகும் என்று பிரதமர் விளக்கினார்.

எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா மற்றும் சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ஆகிய உதவித் திட்டங்களுக்குக் கூடுதலாக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 13 பில்லியனில் இருந்து 15 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே நாடு முழுவதும் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சுமார் 22 மில்லியன் பேருக்கு இந்த 100 ரிங்கிட் நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் விளக்கினார்.

வெறும் 100 ரிங்கிட்தானா என்று சிலர் இளக்காரமாகக் கேட்கலாம். அவர்கள் மாதத்திற்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். அந்த 100 ரிங்கிட் அவர்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான கம்பத்து மக்களுக்கு அந்த 100 ரிங்கிட், அத்தியாவசியத் தேவையாகும் என்று இன்று நிதி அமைச்சு பணியாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது உரையாற்றுகையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News