கோலாலம்பூர், நவம்பர்.12-
மாணவர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 போன்ற அரசாங்க முக்கியத் தேர்வுகள் அகற்றப்பட்டதற்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கல்வி அமைச்சு விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் தொடக்கப்பள்ளிகளில் யுபிஎஸ்ஆர் மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பிடி3 முதலிய தேர்வுகளை மறுபடியும் அறிமுகப்படுத்துவது மூலம் மாணவர்கள் கல்வியில் கருத்தூண்றிப் பயிலும் கலாச்சாரத்தை உருவாக்கும் என்பதுடன் அவர்களைச் சீர்குலைக்கக்கூடிய வீடியோ கேம், சமூக ஊடகங்களின் உள்ளடக்கங்கள் போன்றவற்றில் அவர்கள் தீவிர கவனம் செலுத்துவதைக் குறைக்கக்கூடும் என்று ராம் கர்ப்பால் பரிந்துரைத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தமது வாதத்தை முன் வைத்த ராம் கர்ப்பால், யுபிஎஸ்ஆர் தேர்வு கடந்த 2021 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட வேளையில் பிடி3 தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது என்றார்.
பள்ளி மாணவர்கள் பள்ளிப்பாடங்களிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத் தேர்வுகள் முக்கியக் காரணமாக அமைந்திருந்தன.
அத்தகையத் தேர்வுகள் இல்லாத காரணத்தினால்தான் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் வன்முறை மற்றும் பகடிவதைச் சம்பவங்கள் அதிகமாகத் தலைத் தூக்கியுள்ளனவா? என்பது குறித்து கல்வி அமைச்சு விரிவாக ஆராய வேண்டும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தினார்.








