கோலாலம்பூர், ஜூலை.31-
பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை என்ற போர்வையில் இரும்பு உட்பட உலோக மற்றும் மின் கழிவுப் பொருட்கள் கடத்தல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் 5 மாநிலங்களில் முழு வீச்சில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் பழைய இரும்புக் கடைகள் சம்பந்தப்பட்ட 28 நிறுவனங்கள் சோதனையிடப்பட்டதில் மொத்தம் 332.5 மில்லின் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு 950 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான வருமான வரி இழப்புக்கு வித்திட்ட டத்தோ ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட ஒரு தொழில் அதிபர் சம்பந்தப்பட்ட இந்தக் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் கடந்த ஜுலை 14 ஆம் தேதியிலிருந்து மிகப் பெரிய சோதனையை எஸ்பிஆர்எம் நடத்தி வருகிறது.
எஸ்பிஆர்எம் இந்தச் சோதனைக்குச் சுங்கத்துறை, வருமான வரி வாரியம், மத்திய வங்கியான பேங்க் நெகாரா ஆகியவை பெரும் ஒத்துழைப்பு நல்கி வருவதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரையில் 32 நபர்களின் வாக்குமூலத்தை எஸ்பிஆர்எம் பதிவுச் செய்துள்ளது. இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. 149.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம், 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரக் கார்கள், 15.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பங்களா வீடுகள், 165 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலங்கள் மற்றும் 7 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரக் கைக் கடிகாரங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.








