கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில் விசாரணையில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை தர நிலை இணக்கத் துறையான ஜிப்ஸ் JIPS, விரைவில் சபாவிற்கு செல்லவிருக்கிறது என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
மாவட்ட போலீஸ் தலைவர், மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை அதிகாரி, மற்றும் விசாரணை அதிகாரி ஆகிய மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அயோப் கான் கூறினார்.
அந்த மாணவியின் மரணம் தொடர்பில் மூன்று மூத்த அதிகாரிகளும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளான எஸ்ஓபி SOPயைப் பின்பற்றவில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.
மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பான புலன் விசாரணையில் உண்மையிலேயே எஸ்ஓபி நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயோப் கான் நினைவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும். விசாரணை முடிவுறும் வரையில் அந்த மூவரும் தங்களின் வழக்கமான பணியில் தொடர்ந்து இருப்பர் என்று அயோப் கான் விளக்கினார்.








