கிள்ளான், ஆகஸ்ட்.07-
கடந்த ஜூலை மாதம், இலங்கை பிரஜை ஒருவரைக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வாயிலாக கடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ததாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இரு மலேசியர்களான 27 வயது சந்தியா தர்ஷினி, 46 வயது ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை மற்றும் ஒரு இலங்கைப் பிரஜையான 48 வயது விதிவரன் பழனி ஆகிய மூவர் நீதிபதி முகமட் சப்ரி இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ளும் வகையில் மூவரும் தலையை ஆட்டினர்.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் அந்த மூவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜுலை 10 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முனையம் ஒன்றின் வாயிலாக இலங்கை பிரஜை ஒருவரைக் கடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக மூவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 15 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் ஆள் கடத்தல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








