புத்ராஜெயா, ஜனவரி.07-
நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் Tan Sri Muhammad Hafizuddeain Jantan, லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
மலேசிய இராணுவத்தின் கொள்முதல் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணை சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அவர் கட்டாய விடுப்பில் செல்ல பணிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜெனரல் டத்தோ அஸ்ஹான் முகமது ஒத்மான் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இராணுவ டெண்டர் கார்டெல் தொடர்புடைய ஒரு நபரிடமிருந்து சுமார் 2.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தை ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் மீட்டது.
இராணுவத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.








