ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், நேற்று ஏப்ரல் 15 முதல் வரும் 17 -ஆம் தேதி வரையில் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று காலை 9.56 மணியளவில் அவர் புத்ராஜெயாவிலுள்ள பெர்தானா புத்ரா வளாகத்திற்கு வருகை புரிந்தார்.
அங்கு அவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ வரவேற்பளித்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கௌரவ அணிவகுப்பை அந்தோணி அல்பானீஸ் பார்வையிட்டார்.
இந்த அணிவகுப்பில் 3 அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் கொண்ட ராயல் மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியன் அணிவகுப்பு படையினர் பங்கேற்றனர்.
மேலும், இந்த அணிவகுப்பை மேஜர் முஹம்மது பிர்தௌஸ் மாட் ஹாயின் வழிநடத்தினார்.
இந்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
குறிப்பாக உலகளாவிய நிலைத்தன்மையற்ற சூழ்நிலையில் எரிசக்தி பாதுகாப்பு, மேற்காசிய மோதல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அன்வாருடன் அந்தோணி அல்பானீஸ் ஒரு வரையறுக்கப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார்.
இச்சந்திப்பினைத் தொடர்ந்து, எரிசக்திப் பாதுகாப்பு குறித்த ஒரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








