கோலாலம்பூர், ஜனவரி.03-
நிலுவையில் உள்ள போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்குத் தீர்வு காண்பதற்கு மைபாயார் பிடிஆர்எம் பெயரையும், சின்னத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றும் போலி இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று அரச மலேசியப் போலீஸ் படையியின் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக் கும்பல்கள், பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் ஓர் இணைப்பு லிங்க் அனுப்பப்படுகிறது. அந்த இணைப்பைக் கிளிக் செய்தால், அது அச்சு அசலாக மைபாயார் பிடிஆர்எம் அதிகாரப்பூர்வமாகத் தளம் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
அந்த இணையதளத்தில் போக்குவரத்து அபராதம் அல்லது டோல் கட்டண நிலுவை இருப்பதாகக் கூறி, அதைச் செலுத்த "Pay Now" என்ற பட்டனை அழுத்தச் சொல்கிறது. பின்னர், பயனரின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.
அரச மலேசியப் போலீஸ் படையான பிடிஆர்எம்மோ அல்லது சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவோ ஒரு போதும் பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் அல்லது ரேண்டம் லிங்க்குகள் மூலம் அபராதம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பாது என்று போக்குவரத்து போலீஸ் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். அபராதங்களைச் சரி பார்க்க அல்லது செலுத்த மைபாயார் பிடிஆர்எம் அதிகாரப்பூர்வமாகத் தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக பொதுமக்கள் உணர்ந்தால், உடனடியாக 997 என்ற எண்ணில் தேசிய மோசடி தடுப்பு மையமான NSRC அழைக்கும்படி போலீஸ் துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.








