கோலாலம்பூர், நவம்பர்.27-
பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நாளை வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யவிருக்கிறது.
ஷாம்சுல் இஸ்கண்டாரிடம் 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டைத் தாம் லஞ்சமாகக் கொடுத்ததாக வர்த்தகர் ஆல்பெர்ட் தே, அண்மையில் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் அந்த முன்னாள் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
புலன் விசாரணைக்கு உதவும் வகையில் மூவர் விசாரணைக்கு அழைக்கப்படவிருக்கின்றனர். அவர்களில் வாக்குமூலம் அளிப்பதற்கு தானாக முன்வந்துள்ள சோஃபியா ரினி புயோங் என்ற மாதுவும் ஒருவர் ஆவார் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
அந்த வர்த்தகரிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு ஷாம்சுல் இஸ்கண்டாரின் பினாமியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுவதை அந்த மாது நேற்று நிராகரித்தார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.








