Jun 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய தாதியர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மலேசிய ஆண் தாதியர் சங்கம் எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய தாதியர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மலேசிய ஆண் தாதியர் சங்கம் எதிர்ப்பு

Share:

நாட்டில் நிலவி வரும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், இந்தோனேசிய தாதியர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு, மலேசிய ஆண் தாதியர் சங்கமான எம்எம்என் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து எம்எம்என் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில், இந்தோனேசிய சுகாதாரப் பணியாளர்களின் தொழில்முறைத் திறனை, குறைத்து மதிப்பிடும் நோக்கில், இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்றும், நோயாளிகளின் சிகிச்சைத் தரம், மருத்துவப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் சுகாதார அமைப்பின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் சங்கம் விளக்கமளித்துள்ளது.

தாதியர் பயிற்சி தரநிலைகள், கல்வித் தகுதிகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளில் காணப்படும் வேறுபாடுகள் உள்ளிட்டவைகளோடு, மலாய் மொழி மற்றும் உள்ளூர் வட்டார மொழிகளில் திறம்பட தொடர்புகொள்ளும் திறன் ஆகியவை தங்களின் முக்கிய கவலைகளாக உள்ளதாகவும் மலேசிய ஆண் தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மலேசியாவில் நிலவி வரும் 15 ஆயிரம் தாதியர் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தோனேசியாவிலிருந்து தாதிகளை பணியமர்த்தும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News