ஜோகூர் பாரு, ஜூலை.30-
கொலை செய்யப்பட்டு, நெகிரி செம்பிலான் ரொம்பினில் உள்ள ஒரு புதரில் புதைக்கப்பட்டு, தோண்டி எடுக்கப்பட்ட தனது கொள்ளுப் பேரன் திஷாந்த்தின் உருகுலைந்த முகத்தைப் பார்க்க, உயிரே போகிறது என்று அந்த 6 வயது சிறுவனின் கொள்ளுப் பாட்டி வேதனையுடன் தெரிவித்தார்.
தனது கொள்ளுப் பேரனின் இறப்பைய்ஹ் தங்கள் குடும்பத்தார் இன்று வரையில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்று அந்த மூதாட்டி மிகுந்த துயரத்துடன் கூறினார்.
கலையான முகம், குடும்பத்தில் செல்லப் பிள்ளை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதில் கெட்டிக்காரன். அழகு நிறைந்த எங்கள் பாலகன் எத்தனை நாட்களுக்கு மண்ணுக்குள் புதையுண்டு கிடந்தானோ தெரியவில்லை, அவனது உருகுலைந்த முகத்தை எங்களால் பார்க்கவே முடியவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூதாட்டி கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
தங்களுடன் இருந்த பாலகன் திஷாந்த், சில நாட்களுக்கு முன்புதான் அவனது தந்தை அழைத்து சென்றதாக ஜோகூர், மாசாய், பண்டார் ஸ்ரீ அலாம், ஜாலான் ரிம்புனில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் குழுமியிருந்த அந்த மூதாட்டியைச் செய்தியாளர்கள் அணுகிய போது மேற்கண்டவாறு கூறினார்.
சவப் பரிசோதனைக்குப் பிறகு அந்த சிறுவனின் உடல் நேற்று இரவு 9.30 மணியளவில் அவனது தாயாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே வீட்டில் அதிகமான உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
அந்தச் சிறுவன், கேபள் டையினால் கழுத்து இறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று நேற்று ரெம்பாவ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாஃப்பிர் முகமட் யூசோஃப் தெரிவித்து இருந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.








