கோலாலம்பூர், நவம்பர்.01-
நாட்டில் இன்ஃபுளுவென்ஸா தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அக்டோபர் 19 முதல் 25 ஆம் தேதி வரை நாடு முழுவதும் காய்ச்சல் போன்ற தொற்றுச் சம்பவங்களும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் 43வது தொற்று நோயியல் வாரத்தில் இன்ஃபுளுவென்ஸா போன்ற நோய் சம்பவங்களையும் கடுமையான சுவாச தொற்றுகளையும் கண்காணித்ததில் அவை சரிவு நிலையைக் காட்டியுள்ளன.
பள்ளிகளில் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இன்ஃபுளுவென்ஸா பீடித்தவர்கள் சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட சுகாதாரப் பிரச்சனை உள்ளவர்களுக்குத் தொற்று கடுமையான நோய் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சு எச்சரித்தது.
எனவே நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அஃது ஆலோசனை கூறியது.








