ஜார்ஜ்டவுன், அக்டோபர்.03-
2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலம் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரத்தில் அப்போதைய மாநில அரசிடம் ஒரு பில்லியன் ரிங்கிட் கையிருப்பில் இருந்துள்ளது என பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தொங் கியோங் கூறியிருப்பதை மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவின் உதவியாளர் மறுத்திருக்கிறார்.
பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சியாக இருந்த சமயம், கெராக்கான் 1969 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் 39 ஆண்டுகள் பினாங்கு மாநிலத்தை ஆட்சி புரிந்தது. ஆனால், மாநில அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்வதில் கெராக்கான் தோல்வி கண்டதை அடுத்து ஜசெக மாநில ஆட்சி அதிகாரத்தை ஏற்றது.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தோல்வி கண்ட பிறகு கெராக்கான் அந்தக் கூட்டணியை விட்டு விலகியது.
கடந்த வாரம் கெராக்கான் பேராளர் மாநாட்டில் பேசிய ஓ தொங் கியோங் பினாங்கு மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சிக் காலம் இறுதிக் கட்டத்தில் இருந்த போது கெராக்கான் தலைமையிலான மாநில அரசாங்கம் பெரும் தொகையை அரசாங்கத்தில் கையிருப்பாக வைத்திருந்தாகக் குறிப்பிட்டு இருந்தார்.








