ஷா ஆலாம், ஜனவரி.19-
சுமார் 9 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, குடிநுழைவுத் துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
46 வயதுடைய குடிநுழைவுத் துறை அதிகாரி முஹமட் ஃபாஸ்லி அப்துல் ரஹிம் மீது 53 குற்றச்சாட்டுகளும், அவரது 44 வயது மனைவி சுஹானா இஸ்மாயில் மீது 7 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
முறையாக ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதற்காக, லஞ்சமாக 5 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரிங்கிட்டைப் பெற்றதாக முகமட் ஃபாஸ்லி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம் வெளிநாட்டு நபர் ஒருவரின் நிறுவனக் கணக்கிலிருந்து இவரது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
தனது கணவர் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு, இரண்டு நகைக்கடைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 850 ரிங்கிட் மதிப்பிலான தங்கத்தை வாங்கியதாக மனைவி சுஹானா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கணவனும், மனைவியும், இந்த முறைகேடுகளை கடந்த 2023 பிப்ரவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் சுபாங் ஜெயா மற்றும் தெலுக் பங்ளிமா காராங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் புரிந்ததாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.








