கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று ஆடவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணையில், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து போலீஸ்கார்களும், போலீஸ் அதிகாரிகளும் சாட்சியம் அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார். மரண விசாரணைக்கான தேதியைப் பெற, போலீசார் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, 21 வயது எம். புஷ்பநாதன் 24 வயது தி.பூவனேஸ்வரன், மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் , ஆகியோர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த மூவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்வதுடன், இதில் குற்றவியல் அம்சங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு சட்டத்துறை அலுவலகம் மரண விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மூவரும் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களில் ஒருவர் போலீஸ் அதிகாரியை வெட்டுக் கத்தியால் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள், இந்த மரண விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூவரும் போலீசாரால் உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறும் முக்கிய ஒலிப்பதிவு ஆதாரங்கள் இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் துப்பாக்கிக் குண்டுகளின் பாதை தொடர்பான தகவல்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








