சிரம்பான், டிசம்பர்.22-
நெகிரி செம்பிலான், பெடாஸ் (Pedas) பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த விசாரணைகள் கிட்டதட்ட நிறைவடைந்துள்ளதாக மாநில போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக் கோப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் இது சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படும் என்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் முகமட் இட்ஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 32 வயதுடைய பிரதான சந்தேக நபர், உயிரிழந்த பெண்ணின் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற இருவர் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கருதப்படுகிறது.
போலீஸ் துறையினர் இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருவதாகவும், விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் முகமட் இட்ஸாம் உறுதி அளித்தார்.








