இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானிக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்த தொடர் விசாரணையில், மேலும் ஒரு மலேசிய விமானியை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 வயதுகளில் உள்ள அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் இந்த வழக்கில் மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தற்போது கைது செய்யப்பட்ட இரண்டாவது விமானி, முதல் விமானி பணியாற்றிய விமான நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும், கடத்தல் கும்பலுக்கும் முதல் விமானிக்கும் இடையிலான பணப் பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தா, Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில், 25 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








