பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், புத்ராஜெயாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் 325 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை தலைமையகத்தைச் சேர்ந்த 127 அதிகாரிகள், ஜேடிகேஎஸ்எம்எனப்படும் மலேசிய தீபகற்ப தொழிலாளர் துறை மற்றும் தேசிய பதிவிலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

மொத்தம் 740 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 325 பேர் கைது செய்யப்பட்டனர்.

முறையான பயண ஆவணம் அல்லது குடிநுழைவு அனுமதி இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருத்தல் மற்றும் விசா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குடிநுழைவுச் சட்டத்தை மீறும் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களை வேலைக்கு அமர்த்தும், தங்கவைக்கும் அல்லது உதவும் தரப்பினர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.








