நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவாங்கு முனாவிரின் யாங் டிபெர்துவான் பெசார் பதவி தொடர்பான பிரகடன ஆவணத்தில் தாம் வற்புறுத்தலின் பேரில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமது விருப்பமின்றி அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதாகக் கூறிய அவர், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இது தொடர்பாக போலீஸ் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த ஆவணம் 1959 நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது பிரிவின் படி குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அது செல்லுபடியாகாது என்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மாநில அரசு கருதுவதாக இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்துக்கு இணக்கமான முறையில் தீர்வு காண சமரசக் குழு ஒன்றை அமைப்பது குறித்தும் மாநில ஆட்சிக் குழு ஆலோசித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உண்டாங் யாங் எம்பாட் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நால்வர், தம்பின் துங்கு பெசார் மற்றும் சுங்கை உஜோங் டத்தோ ஷாபண்டார் ஆகியோருடன் இணைந்து, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி போர்ட்டிக்சனில் உள்ள இஸ்தானா லகுனா பீருவில் இஸ்மாயில் லாசிம் அந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏப்ரல் 19-ஆம் தேதியிட்ட பிரகடனத்தை மாநில அரசு ஏற்கவில்லை என்பதுடன், அதன் சட்டபூர்வத்தன்மை தொடர்பான சர்ச்சையும் தொடர்ந்து நீடிக்கிறது.
இதன் மூலம் துவாங்கு முஹ்ரிஸுக்கு தமது முழு ஆதரவையும் மாறாத விசுவாசத்தையும் இஸ்மாயில் லாசிம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.








