சரவாக் மாநிலம் உலு பாராம் பகுதியில், நேற்று மருத்துவச் சேவைக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து அச்சேவைக்கென ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
1970-களில் தொடங்கப்பட்ட இந்தச் சேவையானது, நாட்டின் உள்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சேவையை சுகாதார அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், மேலும் வலுப்படுத்தும் என்றும் சுல்கிஃப்ளி அஹ்மாட் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர்கள் எப்போதும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு வருவதாகவும் சுல்கிஃப்ளி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்தச் சேவைக்காக சுகாதார அமைச்சிடம் சொந்த ஹெலிகாப்டர்கள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பராமரிப்பு வரலாறு தொடர்பான தகவல்களை அமைச்சு தற்போது சேகரித்து வருவதாகவும், அந்த அறிக்கை விரைவில் தமக்கு கிடைக்கும் என்றும் சுல்கிஃப்ளி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும் வரை அதே ரக ஹெலிகாப்டர்களை தற்காலிகமாக இயக்கத் தடை விதிக்க வேண்டும் என செனட்டர் ஆர்ஏ. லிங்கேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








