கெடா மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட ஓப்ஸ் மாஹிர் என்ற அதிரடி நடவடிக்கையின் மூலம் கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இரு தொழிற்சாலைகளில் இருந்து 39 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில், குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தெகாம் பத்து மற்றும் புக்கிட் மக்மூர் தொழில்துறை பகுதிகளில் அமைந்துள்ள இரு தொழிற்சாலைகளில் இந்தச் சோதனையானது நடத்தப்பட்டது.

மொத்தம் 69 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 முதல் 50 வயதுக்குட்பட்ட 39 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் வங்காள தேச நாட்டைச் சேர்ந்தவர்கள், 15 பேர் மியன்மார். இந்தோனேசியாநாட்டைச் சேர்ந்த ஒருவர் இருப்பதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், முறையான அனுமதி அல்லது விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தது மற்றும் விசா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குடிநுழைவுச் சட்டக் குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், விசாரணைக்காக மூன்று IMM.29 சாட்சியாளர் சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன.








