Sep 9, 2026
Thisaigal NewsYouTube
தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

Share:

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சலுகைகளைப் பெற்றதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுத்து விசாரணை கோரினார்.

60 வயதான அப்துல் அஸீஸ், நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தான் குற்றவாளி அல்ல எனத் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தபுங் ஹாஜி தலைவராக பதவி வகித்த போது, அந்நிறுவனத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி இஸ்மி இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டு, புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தபுங் ஹாஜியின் பிரதிநிதியாக தன்னை நியமிக்கப் பரிந்துரைக்குமாறு உத்தரவிட்டதாக அப்துல் அஸீஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் பதவியின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சத்து 90,000 ஊதியம் மற்றும் BMW 7 Series கார் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தில் தமக்கு நலன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் 193.5 மில்லியன் ரிங்கிட் வரை முதலீடு செய்ய தபுங் ஹாஜி இயக்குநர் குழுவின் ஒப்புதலைப் பெற தனது பதவியைப் பயன்படுத்தி செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 23(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குற்றத்துடன் தொடர்புடைய சலுகையின் மதிப்பு தொகையின் ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் இதில் எது அதிகமோ அதற்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் அப்துல் அஸீஸுக்கு 4 லட்சத்து 50,000 பிணைத் தொகையுடன் இரு உத்தரவாததாரர்கள் நிபந்தனையில் பிணை வழங்கியது.

மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இங்குள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இவ்வழக்கு மேலாண்மையானது வரும் நவம்பர் 11-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News