Sep 9, 2026
Thisaigal NewsYouTube
"விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் 35 ஆண்டுகள் பழமையானது" - செனட்டர் லிங்கேஸ்வரன் தகவல்
தற்போதைய செய்திகள்

"விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் 35 ஆண்டுகள் பழமையானது" - செனட்டர் லிங்கேஸ்வரன் தகவல்

Share:

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, வயதான ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்த நிறுவனங்கள் பழைய ஹெலிகாப்டர்களுக்குப் பதிலாக, புதிய மற்றும் பணிக்கு ஏற்ற விமானங்களை பயன்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்திற்க்கான காரணம் கண்டறியப்படும் வரை, BO-105 ரக ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் தற்காலிகமாக இயக்கத்திலிருந்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உயிர்களின் மதிப்பை ஒப்பந்தச் செலவுகள் அல்லது நிறுவனங்களின் லாபத்துடன் ஒப்பிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மற்றொரு உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மருத்துவச் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த ஹெலிகாப்டர், அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றால் இயக்கப்பட்டாலும் கூட, ஒப்பந்த நிறுவனங்கள் மிக உயர்ந்த விமானப் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யும் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துவதை உறுதி செய்வது மத்திய அரசின் பொறுப்பு என்றும் லிங்கேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விபத்துக்குள்ளான 9M-LLF என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஹெலிகாப்டர், சுமார் 1991-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகவும், தற்போது சுமார் 35 ஆண்டுகள் பழமையானதாகவும் விமானப் பதிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மலேசியாவுக்கு வருவதற்கு முன்பு, இந்த ஹெலிகாப்டர் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பதிவு எண்களுடன் இயக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், இந்த BO-105 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட விமானம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த மாடல் ஹெலிகாப்டர்களின் உற்பத்தி 2001-ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு காரணம், அந்த ஹெலிகாப்டரின் வயது, பராமரிப்பு வரலாறு அல்லது அதன் தற்போதைய நிலை காரணமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட இயக்குநர் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து, முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News