ஜோகூர் மாநிலத்திலுள்ள டேசாரு பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் சிங்கப்பூர் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டேசாருவில் உள்ள ஒரு நீர்ப்பூங்கா வாகன நிறுத்துமிடத்தில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 3 வாகனங்கள் உடைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி, அந்த மூன்று வாகனங்களின் பக்கவாட்டு அல்லது பின்புற கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்ததாக ஷாஃபிக் மசேலான் என்ற முகநூல் பயனர் தெரிவித்துள்ளார்.
தனது வாகனத்திற்கு அருகிலும் எதிரேயும், மற்றொரு வாகனம் அடுத்தடுத்த நிறுத்துமிடத்திலும் நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனது வாகனம் எந்தவித சேதமும் இன்றி தப்பியதாகவும், பின்புற இருக்கையில் குழந்தைகளின் மின்னணு சாதனங்கள் வெளிப்படையாக இருந்த போதிலும் அவை திருடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டேசாருவுக்கு வரும் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை விட்டுச் செல்லாமல், கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








