கோலாலம்பூர், செப்டம்பர்.04-
மக்களை உலுக்கி வரும் இணையப் பகடிவதை பிரச்னையை டிக் டாக் தளம், ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று தமது உள்ளக் குமுறலை வெளியிட்டார்.
டிக் டாக்கில் பகடிவதை தொடர்பில் இந்திய சமூகத்திடமிருந்து தொடர்புத்துறை அமைச்சும், எம்சிஎம்சி எனப்படும் மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையமும் நிறைய புகார்களைப் பெற்று வருகின்றன.
ஆனால், பகடிவதைப் பிரச்னையைக் கையாளுவதில் டிக் டாக் தளம் தீவிரம் காட்டவில்லை என்று டத்தோ ஃபாமி, தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
டிக் டாக் உள்ளடக்கத்தைக் குறிப்பாக, டிக் டாக் நேரலையைக் கண்காணிக்கவும், அதன் தரத்தை மதிப்பீடு செய்யவும் கண்காணிப்பு நெறியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டிக் டாக் நிறுவனம் முன்பு உறுதி அளித்ததாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
ஆனால், டிக் டாக் நிறுவனத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட சந்திப்பில் கூடுதலாக அமர்த்தப்பட்ட கண்காணிப்பு நெறியாளர்களின் எண்ணிக்கையைக் குறிப்பாக தமிழ் டிக் டாக் தளத்தில், நேரலையைக் கண்காணிப்பதற்கு எத்தனை கண்காணிப்பு நெறியாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது என்பதை அந்த நிறுவனம் வெளியிட மறுத்து விட்டதாக டத்தோ ஃபாமி தெரிவித்தார்.
டிக் டாக் தமிழ் நேரலையில் ஏற்படுத்தப்பட்ட பகடிவதை காரணமாக மறைந்த ராஜேஸ்வரி அப்பாஹுவுக்கு நேர்ந்த கதி ஒரு எடுத்துக்காட்டாகும்.
இந்நிலையில் டிக் டாக் தமிழ் உள்ளடக்கத்தையும், நேரலையும் கண்காண்காணிக்க எத்தனை பேரைப் பணிக்கு அமர்த்தி இருக்கிறீர்கள் என்று நாங்கள் பல முறை அந்த நிறுவனத்திடம் கேட்டு விட்டோம். ஆனால், தமிழில் உள்ள கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை வெளியிட அந்த நிறுவனம் தவறிவிட்டதாக டத்தோ ஃபாமி தெரிவித்தார்.
இணைய பகடிவதைப் பிரச்னையைக் கையாள டிக் டாக் தளம் தீவிரம் காட்டத் தவறுமானால் அந்த நிறுவனம், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று டத்தோ ஃபாமி நினைவுறுத்தினார்.








