ஷா ஆலாம், செப்டம்பர்.20-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கிய மடானி மலேசியா தொலைநோக்குப் பார்வையானது அரசியல் எதிர்கட்சிகள், அனைத்து இனங்கள் மீதும் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் மீது கவனம் செலுத்தும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள தொடங்கியிருப்பது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் தற்போது இந்தியர்களிடம் நட்புறவாக உள்ளது என்று குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ ரமணன், மடானி அரசாங்கம் எந்த இனத்தையோ அல்லது தரப்பினரையோ ஓரங்கட்டாமல், புறக்கணிக்காமல் இருக்கக்கூடிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதே இதற்கானக் காரணம் என்றார்.
"முன்பு இந்தியச் சமூகத்தை பாஸ் கட்சி அணுகாது. ஆனால் தற்போது, அக்கட்சி தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு இந்திய சமூகத்துடன் நட்புக் கொள்ள விரும்புகிறது. இதற்கு அடிப்படை வேராக இருந்து தழைக்கச் செய்தது மடானி அரசாங்கமாகும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோ ஶ்ரீ ரமணன் பெருமிதம் தெரிவித்தார்.








