Sep 28, 2026
Thisaigal NewsYouTube
காப்பார்: பயங்கரத் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் சாம்பல்
தற்போதைய செய்திகள்

காப்பார்: பயங்கரத் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் சாம்பல்

Share:

கிள்ளான், மார்ச் 9, 2026 – கிள்ளான், காப்பார் பகுதியில் உள்ள ஜாலான் கப்பு (Batu 9 1/2 Kampung Perepat) அருகே இன்று மதியம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. வானுயர எழும்பிய கரும்புகை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இன்று மதியம் சுமார் 1.44 மணியளவில் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்தது. தகவலறிந்து காப்பார், வடக்கு கிள்ளான், தெற்கு கிள்ளான், அந்தலாஸ், கிள்ளான் துறைமுகம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் ஆகிய ஆறு நிலையங்களில் இருந்து 31 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயணைப்புத் துறையின் முதற்கட்ட விசாரணையில், தீப்பற்றிய மூன்று வளாகங்களில் ஒரு மறுசுழற்சி தொழிற்சாலை மற்றும் ஒரு வண்ணம் சேமித்து வைக்கும் கிடங்கு (Paint storage) ஆகியவை 100 விழுக்காடு முற்றிலும் எரிந்து நாசமானது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு வாகனப் பழுதுபார்க்கும் தளம் (Workshop) சுமார் 50 விழுக்காடு சேதமடைந்தது. திறந்தவெளி நீர் ஆதாரம் இல்லாதது மற்றும் காற்றில் தீ வேகமாகப் பரவியது போன்ற காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தியுள்ளார். மாலை வரை தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. விபத்திற்கான சரியான காரணம் மற்றும் ஏற்பட்ட சொத்து சேதங்களின் மதிப்பு குறித்துத் துறை ரீதியான விசாரணை தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related News