கோலாலம்பூர், ஜனவரி.21-
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க விழாவின் போது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆற்றிய உரையைத் தவறாக மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்கு உதவ, சீன மொழி நாளிதழ் ஒன்றின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை CID இயக்குனர் டத்தோ எம். குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட நாளிதழின் இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் இன்று புதன்கிழமை மதியம் 1 மணியளவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரச மலேசிய போலீஸ் படை விசாரணையை நிறைவு செய்யும் வரை, நாட்டின் நீதி மற்றும் சட்டத்தின் மீதான மரியாதையுடன் பொதுமக்கள் இது குறித்து எந்தவிதமான யூகங்களையும் பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று டத்தோ குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவான USJT- யினால் விசாரிக்கப்பட்டு வருகிறது டத்தோ குமார் குறிப்பிட்டார்.








