கோலாலம்பூர், மார்ச்.25-
நாட்டில் வட பகுதியில் செயல்படும் சுமார் 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள், டீசல் விலை உயர்வு காரணமாகத் தங்கள் தொழிலை மூடும் அபாய நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளன.
பேராக், கெடா, பினாங்கு மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள், டீசல் விலை உயர்வால் இயக்கச் செலவுகள் இரட்டிப்பாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இது குறித்து வட பிராந்திய சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அகமட் ருஸ்லான் கூறுகையில், "டீசல் விலை உயர்வால் முன்பதிவுகள் 50 சதவீதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் கல்விக் கழகங்கள் அதிக கட்டணம் காரணமாகப் பயணங்களைத் தவிர்க்கின்றன," என்றார்.
'மலேசியாவிற்கு வருகைத் தரும் ஆண்டிற்கு' நாடு தயாராகி வரும் நிலையில், இந்த விலை உயர்வு சுற்றுலாத் துறையை முடக்கிவிடும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டுத் தங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








