கோலாலம்பூர், பிப்ரவரி.28-
கோவில் ஒன்றின் ஒரு பகுதி இடிக்கப்படுவதையும், அதில் சிலர் கோவிலின் புனிதமான பகுதியில் ஏறி நிற்பதையும் காட்டும் வீடியோ தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் போலீஸ் துறையை வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர், டாங்கி வாங்கி போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்த நபரின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், வைரலான அந்த வீடியோவில் நபர்கள் சிலர் கோவிலின் 'மூலஸ்தானத்தில்' ஏறி நிற்பதைக் காண முடிகிறது என்று தெரிவித்தார். மூலஸ்தானம் என்பது ஒரு இந்து கோவிலின் முதன்மை தெய்வம் அல்லது தெய்வீக சின்னம் வீற்றிருக்கும் மிகவும் புனிதமான இடமாகும்.
வழிபாட்டுத் தலங்களை அவமதிப்பது அல்லது சிதைப்பது, மற்றும் ஒருவரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே செயல்படுவது ஆகியவை மலேசியாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் சுட்டிக் காட்டினார்.
கோவிலின் மூலஸ்தானத்தில் ஏறி நிற்பது மரியாதைக்குரிய செயல் அல்ல என்பதோடு, அது ஒரு தீவிரமான மத அவமதிப்பாகும். இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் இந்து சமூகத்தினரிடையே ஆழ்ந்த கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
மலேசியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், இத்தகைய செயல்கள் உடனடியாகவும், உறுதியாகவும், வெளிப்படையாகவும் கையாளப்படாவிட்டால், அது மதங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு இடையேயான பதற்றத்தைத் தூண்டும் அபாயம் உள்ளது.
எனவே, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக முறையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் போலீஸ் துறையினருக்கு வழக்கறிஞர் ராஜேஸ் வலியுறுத்தியுள்ளார்.








