பெட்டாலிங் ஜெயா, ஜூலை.24-
இறந்தவர்களைத் தண்டிக்க அரசாங்கம் நோக்கம் கொண்டு இருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விளக்கினார்.
ஆனால், சம்பந்தப்பட்டவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நாட்டின் நிதியை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதிப் பூண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இறந்தவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தை அரசாங்கம் ஒரு போதும் கொண்டு இருக்கவில்லை. நாட்டின் கருவூலத்திலிருந்து ச ட்டவிரோதமாக எடுக்கப்பட்ட அல்லது சம்பாதிக்கப்பட்டப் பணத்தைத் திரும்பப் பெற அரசாங்கம் விரும்புகிறது.
சட்டவிரோதமாகப் பில்லியன் ரிங்கிட் பணம் குவிக்கப்பட்டுள்ளது. அது மக்களின் பணமாகும். அந்தப் பணம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுதீன், அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய 3 பில்லியன் அல்லது 300 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அண்மையில் அறிவித்து இருந்தது.
அந்த சொத்துக்கள் மலேசியாவிற்கு அப்பாற்பட்ட நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டு இருப்பதாக எஸ்பிஆர்எம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








