கோலாலம்பூர், டிசம்பர்.31-
இ-ஹெய்லிங் சேவையில் தற்போது நடைமுறையிலுள்ள "பேரம் பேசும்" முறையினால் ஓட்டுநர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இந்த முறையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (PPIM) போர்க்கொடி தூக்கியுள்ளது. டாக்சிகளுக்கு பேரம் பேசத் தடை விதித்துள்ள நிலையில், இ-ஹெய்லிங் நிறுவனங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியுள்ள அச்சங்கம், இஃது ஓட்டுநர்களைப் பலிகடா ஆக்கும் செயல் எனச் சாடியுள்ளது.
எல்லையற்ற சந்தை என்ற பெயரில் ஓட்டுநர்களின் உழைப்பைச் சுரண்டாமல், குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை நிர்ணயம் செய்து அனைவருக்கும் சமமான நீதியை வழங்க போக்குவரத்து அமைச்சு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சேவையின் தரத்தை உயர்த்துவதில் போட்டி போட வேண்டுமே தவிர, ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்ற இந்த கோரிக்கை இப்போது மலேசிய போக்குவரத்துத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








