அரசாங்க ஏஜென்சி ஒன்றுக்கு தலைமையேற்றுள்ள முக்கிய அதிகாரி ஒருவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக 30 வயது மாது ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார. கடந்த வாரம் அளிக்கப்பட்ட இந்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் அந்த அரசு அதிகாரி, கடந்த ஆண்டிலிருந்து வாட்சப் மூலமாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நிதித்துறையில் ஆலோசகராக பணியாற்றி வரும் அந்த மாது தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள புகாரை சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் வான் கமாருல் வான் அர்சான் உறுதிபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள போலீஸ் புகார், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.








