கோலாலம்பூர், அக்டோபர்.07-
மலேசியாவில் டயர் இறக்குமதியில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய மோசடியை விசாரணை செய்து வரும் எஸ்பிஆர்எம், இறக்குமதி செய்யப்பட்ட டயர்களில் போலி லேபிள்கள் மற்றும் பார்கோட்கள் அழிக்கப்பட்ட மோசடிகளைக் கண்டறிந்துள்ளது.
OPS GRIP என்ற பெயரில் நடைபெற்று வரும் இவ்விசாரணையில், அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்கள் மூலம் டயர்கள் விற்பனை செய்யப்பட்டதும், இறக்குமதி செய்யப்பட்ட டயர்கள் கடத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆறு கிடங்குகள் மற்றும் கொள்கலன்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, மொத்தம் 17,672 டயர்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, Toyo Tires, Yokohama, Bridgestone போன்ற முன்னணி டயர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட டயர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த மோசடிகள் குறித்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருவதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.








