கோலாலம்பூர், ஜூலை.23-
சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா திட்டத்தின் கீழ் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும், தங்கள் மை கார்டு அட்டையின் மூலம் ஒரு முறை பெறக்கூடிய தலா 100 ரிங்கிட் நிதி உதவியைப் பெறுவார்கள்.
இந்த நிதி உதவியை வரும் ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது நாடு முழுவதும் உள்ள 4,100 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்த 100 ரிங்கிட் நிதி உதவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை 10.40 மணியளவில் தொலைக்காட்சி நேரலை வாயிலாக மக்களுக்கான நன்றியைத் தெரிவிக்கும் சிறப்பு அறிவிப்பில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
மைடின், லோட்டஸ், எகோன்சேவ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் போன்ற முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் தங்கள் மைகார்டு அட்டையைப் பயன்படுத்தி, தேவையான பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் விளக்கினார்.
இந்த 100 ரிங்கிட் நிதி உதவி, ஒவ்வொரு வீட்டிற்கும் அல்ல. ஒவ்வொரு தனிநபர் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
"உதாரணமாக, ஒரு கணவன், மனைவி மற்றும் 18 வயதுடைய இரண்டு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம் மொத்தம் 400 ரிங்கிட்டைப் பெறும் " என்று பிரதமர் விளக்கினார்.
நாடு முழுவதும் 22 மில்லியன் மலேசியர்களுக்கு 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இது பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பெரியவர்களுக்கும் இந்த பண உதவி வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.








