புத்ராஜெயா, ஜனவரி.07-
அரசாங்கம், நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தவிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் இன்று அறிவித்துள்ளார்.
தொழிலாளர்கள், குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள் அல்லது உடல் ஊனமுற்றவர்கள், தொழில் நீதிமன்றங்களுக்கு நேரடியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதே நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
தொழிலாளர் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளைத் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே கையாள்வதன் மூலம் நீதியை விரைவாக உறுதிச் செய்ய இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சின் 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம் பார்க்கப்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது காட்டுகிறது என டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களால் இதற்கான ஆலோசனைகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது, இதன் செயலாக்கம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரவிருப்பதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








