கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
பிரதமரும், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்ற உரிமைக் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்க்கட்சியினர் சமர்ப்பிக்கவில்லை என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
அப்படியொரு தீர்மானத்தை இதுவரையில் தாம் பெறவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.
பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாங்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய சபாநாயகரின் முடிவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது தொடர்பில் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இதனைத் தெரிவித்துள்ளர்.
சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மானிய சீரமைப்புத் திட்டத்திலிருந்து பயன் அடைந்து வரும் வெளிநாட்டினருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளைத் தற்காத்து வருவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கும் கருத்தைத் தொடர்ந்து அவர், நாடாளுமன்ற உரிமைக் குழு முன்னிலையில் நிறுத்துவதற்குத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முகைதீன் தெரிவித்து இருந்தார்.
எனினும் தன்னிடம் எந்தவொரு தீர்மானமும் சர்ப்பிக்கப்பட்டு இருக்குமானால், இறைவன் அருளில் அதனை மதிப்பாய்வு செய்து, நிலைக்குழுவினரிடம் கோடிட்டுக் காட்டி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஆனால், அப்படியொரு தீர்மானம் எதனையும் இன்னும் பெறவில்லை என்று அவர் விளக்கினார்.








