மூதாட்டி ஒருவரிடம் 32,304 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததாக இரண்டு ஆண்கள் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி தாமான் ஓவர்சீஸ் யூனியன்னில் உள்ள சந்தைக்கு முன்னால் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, 36 வயதுடைய இந்தியக் குடிமகன் நாகூர்கனி பஷீரலி மற்றும் 56 வயதுடைய எம் சரவணன் ஆகிய இருவர் மீதும் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 395-ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி மசூலியானா அப்துல் ரஷித், உணவக ஊழியரான நாகூர்கனிக்கு பிணை வழங்க மறுத்த வேளையில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சொத்துடைமை ஏஜென்ட்-ஆன சரவணனுக்கு 10,000 ரிங்கிட் பிணை அனுமதித்தார். மேலும் இருவரின் கடவுச்சீட்டுகளையும் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.








