Jun 16, 2026
Thisaigal NewsYouTube
98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல்: இக்ராம் அமைப்பின் முன்னாள் அதிகாரி மீது 158 குற்றச்சாட்டுகள்!
தற்போதைய செய்திகள்

98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல்: இக்ராம் அமைப்பின் முன்னாள் அதிகாரி மீது 158 குற்றச்சாட்டுகள்!

Share:

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 98.27 மில்லியன் ரிங்கிட் ஊழல் செய்ததாக 158 குற்றச்சாட்டுகளின் கீழ் மலேசிய இக்ராம் அமைப்பின் உலு சிலாங்கூர் கிளையின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2021 ஜனவரி 6 முதல் 2025 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரவாங், புக்கிட் பெருந்தோங்கில் உள்ள இக்ராம் அமைப்பின் அலுவலகத்தில் இக்குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 57 வயதுடைய ஃபக்ருதீன் அப்துல் கரீம் மறுத்து விசாரணை கோரியுள்ளார். இக்ராம் அமைப்பின் வங்கி கணக்கிலிருந்து, தனக்குத் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு 149 முறைகளும், தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு 9 முறைகளும் நிதி பரிமாற்றம் செய்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி முகமது நாசிர் நோர்டின், 10 பிள்ளைகளைக் கொண்ட அவரின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டு ஜாமீன்தாரர்களுடன் 5 லட்சம் ரிங்கிட் பிணை அனுமதித்து, கடைப்பிதல் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News