ஈப்போ, நவம்பர்.03-
தைப்பிங்கில் உள்ள மெக்ஸ்வெல் ஹில் எனப்படும் புக்கிட் லாருட் மலையிலிருந்து கால் நடையாக இறங்கும் போது, பெரும் சிரமத்திற்கும் பரிதவிப்புக்கும் ஆளாகிய 6 பெண்கள் உட்பட எழுவர் தீயணைப்பு மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, மாலையில் அந்த எழுவரும், மலையடிவாரத்தை வந்தடைவதற்குத் திட்டமிட்டு இருந்தனர். எனினும் அந்த மலையிலிருந்து ஒரு வழிபாதை வழியாக இறங்கும் போது அவர்கள் பெரும் சிரமத்திற்கும், அவதிக்கும் ஆளாகினர்.
இருள் கவ்விக் கொண்ட நிலையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் அந்த காட்டுப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படைக் குழு அந்த மலைப் பகுதிக்கு விரைந்ததாக பேரா மாநில இடைக்கால இயக்குநர் ஸாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
சம்பவ இடத்தை வீரர்கள் அடைந்த போது, ஆறு பெண்கள் காட்டில் சிக்கியிருந்த வேளையில் ஓர் ஆடவர் மட்டும் உதவிக் கோரி மலையடிவாரத்தை நோக்கிச் சென்று விட்டதாக தகவல் அளிக்கப்பட்டது.
எனினும் அந்த ஆறு பெண்களும், உதவிக் கோரி சென்ற ஓர் ஆடவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பெண்களுக்கு கால்களில் சுழுக்கு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.








