சபா, பூலாவ் பாங்கி, சுங்கை செமாயான் ஆற்றில் முதலை தாக்கியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மூன்றாம் ஆண்டு மாணவரான அச்சிறுவன், தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தூண்டில் சிக்கியதை விடுவிக்க ஆற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது முதலை அவரைத் தாக்கி இழுத்துச் சென்றதாக குடாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஹாரிஸ் இப்ராஹிம் தெரிவித்தார்.
தகவலறிந்த போலீசார், பொது தற்காப்புப் படையினர் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர், சுங்கை செமாயான் பாலத்தின் அடியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தலையில் காயமடைந்திருந்த சிறுவனின் உடல், குடாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.








