ஒருவர், பல நூறு ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றியிருந்தாலும், ஊழல் மற்றும் மக்கள் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தனிநபரின் கடந்தகாலச் சேவைகளைக் காரணம் காட்டி ஊழலைப் பொறுத்துக் கொள்வது இஸ்லாமிய போதனைகளுக்கும் முரணானது என அன்வார், தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவறான செயல்களுக்கு எதிராக மக்கள் உரத்த குரல் எழுப்ப வேண்டும் என்றும், ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்களே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய விவகாரம் நாட்டில் கவனம் பெற்றுள்ள நிலையில், அன்வார் இந்தக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், எந்தவொரு தனிநபரின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், பதவி அல்லது செல்வாக்கின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








