ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள், நாட்டின் நற்பெயர், அனைத்துலக நம்பிக்கை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும் என ஒற்றுமைத்துறை துணை அமைச்சரும், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
ஊழல் என்பது பொதுப் பணத்தை இழப்பதுடன் முடிவடைவதில்லை என்றும், அது அரசாங்க ஏஜென்சிகள், பரிபாலனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையையும், நாட்டின் சட்ட ஆட்சி மீதான மதிப்பையும் சிதைக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செல்வாக்கு, பதவி அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் எவருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக்கூடாது என வலியுறுத்திய யுனேஸ்வரன், அரசியல் விசுவாசம் என்பது ஊழலை நியாயப்படுத்துவதற்கான காரணமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலால் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் வளங்கள் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத் தலைமுறையினரும் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நீதிமன்ற நடைமுறைகளை மதிப்பதும், குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்வதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல எனக் குறிப்பிட்ட அவர், தனிநபர்களைவிட நாட்டின் நலனும் நிறுவனங்களின் நேர்மையும் மேலானவை என்றார்.
இறுதியாக, தண்டனை பெற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் வீட்டுக் காவல் வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யுனேஸ்வரன் எழுப்பியுள்ளார்.








