Nov 11, 2026
Thisaigal NewsYouTube

பேராக் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த ஜிஐஎஸ் தொழில்நுட்பம் - டத்தோ அ. சிவநேசன் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த ஜிஐஎஸ் தொழில்நுட்பம் - டத்தோ அ. சிவநேசன் தகவல்

பேராக் மாநிலத்தில் சுகாதாரச் சேவைகளை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் புவியியல் தகவல் தொழில்நுட்பமான ஜிஐஎஸ் (GIS) முறையைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான அவர், ஈப்போ மேருவில் உள்ள கசுவாரினா தங்கும் விடுதியில் இன்று நடைபெற்ற பேராக் சுகாதார புவிசார் புத்தாக்கக் கருத்தரங்கு 2026 நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

என்றாலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் எவ்வளவு விரைவாகக் கிடைக்கின்றன என்பதை மதிப்பிடும்போது, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள், போக்குவரத்து வசதிகள், பயண நேரம், புவியியல் ரீதியிலான தடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம் என்றார்.

உபென் (UPEN), பேராக்ஜிஐஎஸ் (PerakGiS) மற்றும் பேராக் மாநில சுகாதாரத் துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சுகாதார வசதிகளை அணுகும் வாய்ப்பு, புதிய மருத்துவ நிலையங்களை அமைப்பதற்கான இடத் தேர்வு, சுகாதார அபாயங்களைக் கண்டறிதல், காலநிலை மாற்றத்துக்கும் சுகாதாரத்துக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை அணுகுதல் ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து பயிற்சிகளும் குழு ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாளில் பங்கேற்பாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கவுள்ளனர். அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் வரைபடங்கள் மற்றும் தகவல் பலகை மாதிரிகளை எதிர்காலத்தில் முன்னோடித் திட்டங்களாகச் செயல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →