மலாக்கா மாநில பிகேஆர் கட்சியின் அலோர் காஜா கிளைத் துணைத் தலைவர் சாமிவேல் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
62 வயதான சாமிவேல், மலாக்கா மாநிலத் தேர்தலில் அசாஹான் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டெனேஷின் தேர்தல் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார்.
கட்சிக்காகப் பல ஆண்டுகள் சேவையாற்றிய அவர், அதன் போராட்டத்தில் உறுதியுடன் இருந்தவர் என அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது சேவைகளும் அர்ப்பணிப்பு உணர்வும் தொடர்ந்து நினைவுகூரப்படும் என்றும், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் கட்சித் தோழர்களுக்கும் தாமும் வான் அஸிஸாவும் ஆறுதலையும் பிரார்த்தனையையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.








