லாருட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுடின், எதிர்க்கட்சித் தலைவர் பதவிலிருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஓர் அதிகாரப்பூர்வ கடிதமும் பெறவில்லை என சபாநாயகர் ஜொஹாரி அப்துல் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாகியுள்ளது குறித்து விரைவில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அகமட் சம்சூரி வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, கடந்த திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
என்றாலும், இதுவரை தங்களுக்கு அது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஜொஹாரி அப்துல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹம்சா தனது ராஜினாமா கடிதத்தை பெரிக்காத்தான் தலைமையிடத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு சம்சூரி யிடம் விளக்கம் அளிக்குமாறு ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
அதற்குப் பதிலளித்த அகமட் சம்சூரி, ஹம்சாவின் ராஜினாமாவை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
மாறாக, காலியிடம் குறித்த அதிகாரப்பூர்வ கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று மட்டுமே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








