கோலாலம்பூர், டிசம்பர்.15-
மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் வெளியிட்ட அறிக்கைகள் யாவும் பொய்யானதாகும் என்று ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி இன்று பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார், நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்தத் துப்பாக்கிச் சம்பவம் செம்பனைத் தோட்டத்தில் நடந்தது என்ற அறிவித்துள்ளார்.
ஆனால், இது முழுக்க முழுக்க வடிக்கட்டிய பொய்யாகும் என்று குற்றஞ்சாட்டும் அருண் துரைசாமி, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 224 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரங்களை காட்டும் புகைப்படங்களை இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் காட்டினார்.
இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களை, தகவல் அளித்துள்ள ஒரு நபர், தமிழில் எழுதப்பட்ட கடிதத்தின் வாயிலாக இணைந்துள்ளார் என்ற அருண் துரைசாமி தெரிவித்தார்.
மூன்று தமிழ் இளைஞர்களும் போலீசாரால் மிகக் கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்திக் கொன்றார்கள் என்பதற்கு தமக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் போலீஸ் துறைக்கு தாம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைச் சர்ச்சை செய்ய முடியுமா? என்று மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தாருக்கு எதிராக அருண் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 224 ஆவது கிலோமீட்டரில் பழுது அடைந்து கிடக்கும் ஒரு காரின் சில புகைப்படங்களை மலேசிய நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த காரை இழுத்துச் செல்ல இழுவை வாகனம் ஒன்று அதிகாலை 1.25 மணியளவில் ஒரு வாகனம் முதலாவதாக வந்துள்ளது. அந்த அதிகாலையில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை ஒவ்வொரு சம்பவமாக அருண் துரைசாமி, செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
புதிய ஆதாரங்களுடன் தாம் வெளியிட்ட தகவல்கள் யாவும், மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் வெளியிட்ட தகவல்களுடன் முற்றாக முரண்பாடுகள் கொண்டு இருப்பதாக அரண் துரைசாமி வாதிட்டார்.
மூன்று இளைஞர்கள் பாராங்கினால் தாக்கியதால் 30 வயது மதிக்கத்தக்க ஒரு போலீஸ்காரர் கிட்டத்தட்ட கைத்துண்டாகும் அளவிற்கு காயமுற்றகாகவும், வேறு வழியின்றி மூவரையும் சுட்டுக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக ஸுல்கைரி முக்தார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கைத்துண்டான அந்த போலீஸ்காரர் யார் என்பதை ஸுல்கைரி முக்தார் ஆதாரத்துடன் அடையாளம் காட்ட முடியுமா? என்று அருண் துரைசாமி இன்று சவால் விட்டுள்ளார்.








