புத்ராஜெயா, ஜூலை.29-
சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய ரோஹிம் கும்பலைக் குடிநுழைவுத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
குடிநுழைவுத்துறையின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்டு கடந்த ஜுலை 27 ஆம் தேதி புத்ராஜெயாவில் நான்கு முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், இந்தச் சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கையில் மூளையாக இருந்து செயல்பட்ட ஒரு வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் கொடுத்த தகவலில் பேரில் மேலும் 5 வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரைக் கைது செய்தது மூலம் ரோஹிம் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் இக்கும்பலிடமிருந்து 12 லட்சத்து 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








