கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
கோலாலம்பூர், புடு, ஜாலான் யியூவில் நேற்று ஆடவரின் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போலீஸ்காரரை, போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
செராஸ், சான்செலர் துவாங்கு மூரிஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புடு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அந்த போலீஸ்காரருக்கும், அவரின் குடும்பத்திற்கும் தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஐஜிபி வருகை தந்ததாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வயிற்றில் ஆழமான கத்திக் குத்துக்கு ஆளான அந்த போலீஸ்காரரின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமுற்ற போலீஸ்காரர், அவரின் குடும்ப நலன் பாதுகாக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் உறுதி அளித்தார்.
கோலாலம்பூர் இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட், வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் ஆகியோர் ஐஜிபி.யுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.








